சென்னை:
தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நடப்பாண்டில் 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் மாணவர்கள் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும் என அரசியல் கட்சிகள், ஆசிரிய சங்கங்கள் தெரிவித்திருந்தன இருப்பினும் தமிழக அரசு 5,8-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவதில் தீவிரம் காட்டியது.
இந்நிலையில் திடீரென 5,8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது பள்ளிக் கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குழப்பங்களால் அவர் மாற்றப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
கைத்தறித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் வேறு சில துறைகளின் செயலாளர்களும் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.