ஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு

புதுடில்லி: 'கொரோனா' தொற்றால், உலகமே கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்த நோயை கட்டுப்படுத்துவதில், இந்தியா திறமையாக செயல்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் ஹீரோவாகியிருக்கும் பிரதமர் மோடியை, உலக நாடுகள் பாராட்டுகின்றன.

இந்நிலையில், 'சார்க்' எனப்படும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை சேர்ந்த நாடுகளை ஒருங்கிணைத்து, கொரோனாவுக்கு எதிராக போராடும் முயற்சியில், இந்தியா ஈடுபட்டுள்ளது.


 


ஊரடங்கு:




சீனாவில் பிறந்த கொரோனா வைரஸ், இப்போது, உலகின் அனைத்து நாடுகளிலும், தன் கொடூர முகத்தை காட்டி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, தினமும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும், இந்த நோய் பரவியுள்ளது. இதுவரை, 730க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 15க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இந்தியாவில், 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில், கொரோனாவால், ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானதில் இருந்தே, அதன் பரவலை தடுக்க, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கொரோனாவின், பிறப்பிடமான சீனாவின் வூஹான் நகரிலிருந்து, இந்தியர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தியர்களை மீட்பதற்காக சென்ற இந்திய விமானங்கள், பின், அண்டைநாட்டினரையும் மீட்டு வந்தன.

சீனாவுக்கு, 15 டன் மருத்துவ பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. முக கவசங்கள், கையுறைகள் போன்ற உபகரணங்கள் பற்றாகுறையால், சீனா பாதிக்கப்பட்ட போது, அவற்றை இந்தியா உடனடியாக அனுப்பி வைத்தது. அண்டை நாடான சீனா, கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில். அதற்கு நேசக்கரம் நீட்டிய, இந்தியாவின் செயல், சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றது.